வில்லூர் சங்கிலி கருப்பசாமி பராசக்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே வில்லூரில் சங்கிலி கருப்பசாமி, பராசக்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்குமணி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று கோவில் திருவிழாவில் வில்லூர் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 50,000 மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு பாப்பா ஊரணியிலிருந்து கரகம் மற்றும் சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து சங்கிலி கருப்பசாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. கோவிலுக்கு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அழகு செட்டியார் ஊரணியில் இருந்து பராசக்தி காளியம்மன் கோவில் வரை பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.