உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரத்தில் சேதமடைந்த சாமி சிலைகள், பக்தர்கள் வேதனை

மடப்புரத்தில் சேதமடைந்த சாமி சிலைகள், பக்தர்கள் வேதனை

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி சிலைகள் பலவும் சேதமடைந்து மூளியாக காட்சியளிப்பதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கேட்டவரம் தருபவள், தவறு செய்தவர்களை தண்டிப்பாள் என்பதால் பக்தர்கள் பலரும் நம்பிக்கையுடன் வந்து அம்மனுக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டி செல்கின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு மடப்புரம் கோயிலில் திருப்பணி வேலைகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சாமி சிலைகள் உள்ளிட்ட பலவும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவைகள் சேதமடைந்துள்ளன. மடப்புரம் அம்மனின் இருபுறமும் உள்ள பெண் சிலைகள் சேதமடைந்த நிலையில் அதில் சேலைகளை மறைத்து சுற்றி வைத்துள்ளனர். மடப்புரம் என்றாலே அம்மனின் மேலே பிரம்மாண்டமான குதிரை சிலைதான், அதுவும் சேதமடைந்துள்ள நிலையில் மூளியாக உள்ள சிலைகளால் பக்தர்கள் வேதனையடைகின்றனர். பக்தர்கள் தரப்பில் கூறுகையில்: மடப்புரம் கோயிலில் ஒன்பது உண்டியல்கள் மூலம் காணிக்கையாக 40 லட்ச ரூபாய்க்கு குறையாமல் கிடைக்கிறது. தங்கம் சுமார் 500 கிராம் காணிக்கையாக பக்தர் வருடத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் உள்ள இந்த கோயிலில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் செய்வதில்லை. பக்தர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தருவதில்லை. அம்மன் சிலை உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ள நிலையில் அவற்றை சரி செய்ய நிர்வாகத்தினர் எந்த வேலையும் செய்வதில்லை. உண்டியல் காணிக்கையை எண்ணுவதற்கு மட்டும் துணை ஆணையர், இணை ஆணையர் என அனைவரும் வந்து விடுகின்றனர். ஆனால் கோயிலுக்கு தேவையானதை செய்வதில்லை என குற்றம் சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !