உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கின்றன. இதனால், உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்த நாளில், கும்பாபிஷேகம் நடத்தவில்லை. திருப்பணிகளுக்கு நிதி அளிப்பதாக சொன்ன, ஹிந்து சமய அறநிலையத்துறை ஏமாற்றியதால், நன்கொடையாளர் வாயிலாக, மந்தகதியில் பணிகள் நடந்து வருகின்றன. மாமல்லபுரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வைணவ 108 திவ்ய தேசங்களில், 63வதாக சிறப்பு பெற்றது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரண்டு ஆழ்வார்கள் உள்ளிட்டோர் வீற்றுள்ளனர். சுவாமி சயன கோலத்தில் தோன்றி, நிலம் தொடர்பான தோஷ பரிகார கோவிலாக விளங்குகிறது. இதன் கும்பாபிஷேகம், நீண்ட காலத்திற்கு பிறகு, கடந்த 1998ல் நடந்தது. ஆகமப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என, 2010, 2022 ஆண்டுகளில், கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டிய நிலையில், 25 ஆண்டுகள் கடந்தும், நடத்தப்படாமல் தடைபட்டுள்ளது. கோவிலில் முறையான பராமரிப்பு இல்லை. பல்லவர் கால சிற்பங்களை காண குவியும் பயணியர், அர்ஜுனன் தபசு சிற்பத்தை ஒட்டியுள்ள, இக்கோவிலுக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை. கோவிலில், கடந்த 2021ல், அன்னதானம் சாப்பிட முயன்ற, நரிக்குறவ பெண் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் வழிபட்டு, நரிக்குறவர்களுடன் அன்னதானம் சாப்பிட்டார். இக்கோவிலில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்துவதாக பத்திரிகையாளர்களிடம் அப்போது அவர் தெரிவித்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம், பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், திருப்பணிகள் துவக்கப்பட்டன. இப்பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

முதல்கட்டமாக, சுவாமியர் சன்னிதிகளின் விமானங்கள், பழமைத்தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. கோவிலில் தேவையற்ற கட்டமைப்புகள் அகற்றப்பட்டன. சன்னிதி சுவர்கள், மஹா மண்டபம் உள்ளிட்டவற்றில், நீண்டகாலமாக படிந்த சுண்ணாம்பு பூச்சு படிமம் அகற்றப்பட்டு, பாறைக் கற்களின் இயல்பு தன்மை மீட்கப்பட்டது. பணிகளை, அறநிலையத் துறையினர், உயர்நீதிமன்ற வல்லுனர் குழுவினர் என, அவ்வப்போது ஆய்வு செய்தனர். இதற்கிடையே, பக்தர் ஒருவர், கடந்த நவம்பர் மாதம், பூதத்தாழ்வார் அவதார நாளில், அவருக்கு திருமஞ்சனம் நடத்தக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அறநிலையத் துறையினர், கோவில் அர்ச்சகர்களிடம் ஆலோசித்தபோது, பாலாலயம் நடந்த கோவிலில், திருமஞ்சனம் சாத்தியமற்றதாக தெரிவித்தனர். வழக்கு விசாரணையின் போது, கோவில் நிர்வாகத்தினர், நீதிமன்றத்தில் இதுபற்றி விளக்கினர். திருப்பணிகளை விரைவுபடுத்தி, கும்பாபிஷேகத்தை தாமதமின்றி நடத்த, நீதிமன்றம் வலியுறுத்தியது.

கால தாமதம்: துறை உயரதிகாரிகள், கோவில் அர்ச்சகர்களுடன் பரிசீலித்து, கும்பாபிஷேகத்தை, இம்மாதம் 4ம் தேதி நடத்துவதாக, கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் உறுதியளித்தனர். திருப்பணிகள் இழுபறியால், கும்பாபிஷேகத்தை குறித்த நாளில் நடத்த இயலவில்லை. அறநிலையத் துறை நிதியில் திருப்பணிகள் மேற்கொள்வதாக, அமைச்சர் சேகர்பாபு முன்பு தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதோ, ஆளும் கட்சிக்கு வேண்டிய நபர், நன்கொடையாக, இப்பணிகளை செய்வதாக கூறப்படுகிறது. நன்கொடையாளரிடம் பணம் பெற்று திருப்பணிகளை செய்வதில், கால தாமதம் ஏற்படுவதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பணிகள் தடைபட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது. பாறைக் கற்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில், கால தாமதம் ஏற்படுகிறது. இதனால்தான் பணிகள் தடைபட்டுள்ளன. மீண்டும் திருப்பணிகள் துவக்கப்பட்டு, விரைவாக முடிக்கப்படும். - கோவில் நிர்வாகிகள், ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம்.

செய்யப்படும் திருப்பணிகள்: அனைத்து சன்னிதிகளையும், 32.54 லட்சம் ரூபாய் மதிப்பில், பழமைத்தன்மை மாறாமல் புதுப்பித்தல் ஊஞ்சல் மண்டபத்தை, 7.53 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்தல் பாரம்பரிய தன்மைக்கு மாறான கான்கிரீட் அறைகள், சுவர் பகுதிகளை நீக்கி, பாரம்பரிய சூழலுக்கு மாற்றுதல் உலோக கதவுகளை அகற்றி, மரத்தாலான கதவுகள் அமைத்தல் ராஜகோபுரம், மஹா மண்டப மேல்தளம் பராமரித்தல் வாகன மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், 16.80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்தல் கோவில் வளாகத்திற்கு, 22.80 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !