ஆன்மாவை அறிதலே ஆன்மிகம்; ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள்
ஆனைகட்டி: ஆன்மாவை அறிதலே ஆன்மீகம் என, ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசினார். கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுல ஆசிரமத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை, 10.00 மணி முதல், 11.00 மணி வரை திருமந்திரம் குறித்த தமிழ் சொற்பொழிவு நடக்கிறது. இதில், ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்," மறைபொருளாக இருக்கக்கூடிய விஷயங்களை கற்று தருவது சாஸ்திரங்கள். இறைவனுடைய மகிமைகளை போற்றி, துதி பாடுவது ஸ்தோத்திரங்கள் எனப்படும். ஆன்மாவை அறிதல் என்பதே ஆன்மிகமாகும். இறைவனை அன்பின் திரு உருவமாக, அருளின் திரு உருவமாக போற்றி செய்து, இறைவா என்னை காத்தருள்வாய் என கேட்பது பிரார்த்தனை ஆகும். இறைவன், அனைத்தையும் அறிந்தவன். இந்த உலகம், ஒரு நியதிப்படிதான் இயங்குகிறது. அதை தான் தெய்வம் என்று கூறுகிறோம். இந்த ஜகம் இறைவனை சார்ந்து இருக்கிறது. இந்த உலகுக்கு, இறைவன் தான் மூலம். பொய் சொல்லக்கூடாது. லஞ்சம் வாங்க கூடாது என்பது நியதி. அதையும் மீறி செய்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். மனசாட்சி என்பது தெய்வம். அவர்கள் அந்த தெய்வத்தை மறந்தவர்கள். மனசாட்சியை தூண்டுதல் செய்வது தான் பத்தி. எவன் ஒருவன் இறைவன்பால், பக்தி செலுத்துகிறனோ, அவனுடைய மனதில் இறைவன் கோயில் கொண்டுள்ளான். ஆசைகளை துறந்தால், பிரம்மத்தை அடையலாம்" என்றார்.