உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் அம்பாள் தேரில் வீதியுலா செல்வாரா?

வேதகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் அம்பாள் தேரில் வீதியுலா செல்வாரா?

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் உற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 23ம் தேதி வரை நடக்கும் இதில், ஏழாம் நாள் உற்சவமாக, வரும் 19ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெறும்.

அதற்காக, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோருக்கு, தனித்தனி தேர்கள் உள்ளன. சித்திரை பெருவிழாவில், அவர்கள் தேரில் வீதியுலா செல்வது வழக்கம். ஆனால், ஆடிப்பூரம் திருத்தேர் உற்சவத்தில், அம்பாள் தேரில் வீதியுலா செல்வதில்லை. அதற்கு பதிலாக, சப்பரத்தில் வீதியுலா செல்வது நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. திருத்தேர் உற்சவத்தின் போது, அம்பாளுக்கு தனியாக தேர் இல்லாத சூழலில் தான், அம்பாள் வீதியுலாவிற்காக சப்பர வாகனம் ஏற்பாடு செய்யப்படும். ஆனால், அம்பாளுக்கு தனியாக திருத்தேர் இருந்தும், ஆடிப்பூரம் உற்சவத்தில் பயன்படுத்தப்படுவதில்லை ஏன் என, பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது மட்டுமின்றி, சித்திரை திருவிழாவின் போது அம்பாள் திருத்தேரில் வீதியுலா வருவது போல், ஆடிப்பூர விழாவின் போதும் வீதியுலாவுக்கு தேர் பயன்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !