இருக்கன்குடி ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கை , ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஆடிக் கடைசி வெள்ளி வரும் ஆகஸ்ட் 11ல் வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று கோயில் கொடிமரத்தில் காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முத்துக்குமாரபட்டர், காசி விஸ்வநாத பட்டர்கள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து திருவிழா கொடியேற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். கோயில் உதவி ஆணையாளர் (பொ) வளர்மதி பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி தலைமை வகித்தனர். இருக்கன்குடி, நத்தத்து பட்டி, கே.மேட்டுப்பட்டி, அப்பனேரி, நென்மேனி மற்றும் சுற்றுக்கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். திருவிழா துவங்கியதை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெறும் மேலும் நிர்வாகத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது பக்தர்கள் தங்குவதற்கு உண்டான வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். எஸ்.பி.சீனிவாசப் பெருமாள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். டி. எஸ். பி. வினோ ஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.