திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி சிறப்பு பூஜைகளும், மகாபாரத சொற்பொழிவு நிகழ்வுகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி விழா இன்று அதிகாலை 5:55 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள் அரசூரணி குளத்தில் நீராடி அங்கிருந்து ஊர்வலமாக சென்று திரவுபதி அம்மன் கோயிலை அடைந்தனர். பின்பு கோவிலின் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக நேற்று இரவில் அக்கினி குண்டம் வளர்ப்புக்கான யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.