பாரப்பா பழனியப்பா.. பழநி வரும் பக்தர்கள் படும் பாட்டை; பார்க்கிங் பிரச்சனை, ஆக்ரமிப்பு, டிக்கெட் எடுக்க பல மணி நேரம்..
பழநி: பழநி வரும் பக்தர்கள் பஸ் ஸ்டாண்ட் முதல் மலைகோயில் வரை பல்வேறு தொந்தரவுகளால் அவதிப்படுகின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு தினமும் வெளிமாநில மாவட்ட வெளியூர் பக்தர்கள் பஸ், ரயில் வழியாக ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவர்கள் பழநி வந்ததிலிருந்து தரிசனம் செய்து சொந்த ஊர் திரும்பும் வரை படாதபாடு படுகின்றனர்.
மூன்றாவது வின்ச், இரண்டாவது ரோப்கார் இல்லை: பழநி வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் படிப்பாதை, யானை பாதையை தேர்வு செய்தாலும் சிலர் வின்ச் மற்றும் ரோப்கார் பயணங்களில் ஆர்வமுடன் பயணிக்கின்றனர். தற்போது இரண்டு வின்ச் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மூன்றாவது வின்ச் செயல்பாட்டுக்கு வர பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் டிக்கெட் எடுக்க பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் சென்று வரலாம். ஆனால் தற்போது ரோப் காரில் ஒரு முறைக்கு 12 நபர்கள் மட்டுமே சென்று வர முடியும். எனவே இரண்டாவது ரோப் கார் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும். கோரிக்கை எழுந்துள்ளது.
ஆக்ரமிப்பு தொல்லை: பழநி மலைக்கோயில் கிரிவிதி, அடிவாரம் பகுதிகளில் பேன்சி கடைகள், தட்டு கடைகள், பூஜை சாமான் கடைகள் ஆகியவை உள்ளன. பெரும்பாலும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சன்னதி வீதி வீதி பகுதிகளில் கடைகள் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆக்ரமிப்பு குறித்து கோர்ட் உத்தரவு நடைமுறையில் இருந்த போதும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து உள்ளது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். கோயில் நிர்வாகம்,நகராட்சி, வருவாய் துறையினர் இணைந்து தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை செய்து வந்தால் ஆக்கிரமிப்புகள் கட்டுப்படுத்தப்படும்.
பார்க்கிங் பிரச்சனை: சுற்றுலா வாகன பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தாமல் கிரிவீதியில் வாகனங்களை நிறுத்துவதால் மேலும் சிரமம் பக்தர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கூட்டம் அதிகம் உள்ள வெள்ளி, சனி, ஞாயிறு, விடுமுறை கார்த்திகை, விஷேச நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதியில் அருள்ஜோதி வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோப்கார், வின்ச் நிலையங்கள் அருகே அருகே வாகனங்களை நிறுத்த முடியாமல் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
போலி கைடு தொல்லை: பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளி மாநில, வெளி ஊர் பஸ்ஸில் இறங்கி முருகன் கோயிலுக்கு வழிகேட்கும் பக்தர்களை அழைத்துச் செல்வதாக கூறி பணம் பறிக்கின்றனர். மலைக்கோயில் சென்று எளிதாக தரிசனம் செய்யலாம் என கூறி அவர்களை படிப்பாதை, யானை பாதை வழியாக மலைக்கோயிலுக்கு வர வலியுறுத்துகின்றனர். கைடுகள் எனக்கூறி பக்தர்களிடம் ஆயிரக்கணக்கான ரூபாய் பேரம் பேசி அழைத்துச் சென்று ஏமாற்றுகின்றனர். பழநி கோயில் நிர்வாகம் சார்பில் கைடுகள் நியமிக்கப்படவில்லை. பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளதை பயன்படுத்தி போலி கைடுகள், ஏமாற்றும் நபர்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம்.
அதிக விலைக்கு பொருட்கள்: பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து மலைக்கோயில் செல்லும் போது தேவர் சிலை அருகே, சன்னதி வீதியில் சிலர் இதற்கு மேல் செருப்புகளை அணிந்து செல்லக்கூடாது, எனக் கூறி கடைக்குள் அழைத்து விலை அதிகமாக பொருட்களை விற்று வருகின்றனர். இதனால் பக்தர்கள் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். தட்டு கடைக்காரர்கள் வெள்ளி எனக் கூறி வேல், கை, கால், தலை போன்ற உருவ பொம்மைகளை, வெளி மாநில பக்தர்களிடம் ஏமாற்றி விற்கின்றனர். இதனால் கோயிலுக்கு செல்லும் முன்பே மன உளைச்சல் அடைகின்றனர். போலி வெள்ளி பொருட்களை கோயிலில் பெற்றுக் கொள்வதில்லை எனவே கோயில் உண்டியல் போடுகின்றனர். உண்டியலில் தேவையற்ற பொருட்கள் சேர்கிறது.
முடிக்காணிக்கையில் ஏமாற்றம் : முடிக்காணிக்கை செலுத்தும் இடங்களில் தனியார் சிலர் பக்தர்களிடம் முடிக்காணிக்கை எடுத்து தரப்படும் எனக் கூறி தனியார் கடைகளுக்கு அழைத்துச் சென்று முடி எடுத்து அனுப்பி விடுகின்றனர். இதில் பெரும்பாலும் பெண்களைக் குறி வைத்து மொட்டை அடிக்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. மேலும் திருக்கோயில் சார்பில் உள்ள முடி எடுக்கும் மையங்களில் இலவசம் என்ற போதிலும் முடி எடுக்கும் நபர்களில் சிலர் பணம் கேட்கின்றனர்.
நாய்களால் அச்சம்: பழநி மலையில் அதிக அளவில் நாய்கள் சுற்றி திரிகிறது. யானை பாதை, படிப்பாதை முதல் வெளிப்பிரகாரம் வரை நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பக்தர்கள் மலையேறி செல்லும்போது அச்சத்துடன் செல்கின்றனர். சிறுவர்கள் முதியவர்கள் சிரமம் அடைகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யானை பாதையில் பராமரிப்பு கட்டிடங்கள்: தற்போது யானை பாதையில் படிகள் மற்றும் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே முறையான அறிவிப்பு பலகைகள் எதுவும் இல்லை. இதனால் படி ஏறி வரும் முதியவர்கள் மற்றும் இறங்கும் வயதான நபர்கள் நிலை தடுமாறுகின்றனர். இதனால் அவர்களுக்கு காயம் ஏற்படும் சூழல் அபாயம் ஏற்படுகிறது. யானை பாதையில் இடும்பன் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள முதலுதவி மையம் பல நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. அதன் அருகே செட் அமைக்கப்பட்டு முதலுதவி மையம் உள்ளது. இது பக்தர்கள் பார்வைக்கு எளிதில் தெரிவதில்லை. அப்பகுதியில் முதல் உதவி பெற சிரமப்படுகின்றனர்.
கட்டண தரிசன வழியில் தண்ணீர் தட்டுப்பாடு: மலைக்கோயில் நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் பாலாறு அணையில் இருந்து வரவழைக்கப்படுகிறது. தற்போது வரும் பக்தர்களுக்கு போதுமான அளவு நீர் தேவை பூர்த்தி செய்ய இயலும். யானை பாதை படிப்பாதை ஆகியவற்றில் சில இடங்களில் குடிநீர் இணைப்புகள் பழுதடைந்துள்ளன. மேலும் ரூ. பத்து தரிசன வழியில் ட்ரம்களில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குரங்குகள் தண்ணீரை திறந்து விடுகின்றன இதனால் ட்ரம்கள் விரைவில் காலியாகிறது. 100 கட்டண தரிசன வழியில் இந்த வசதியும் இல்லை. இதனால் பக்தர்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் குழாய்கள் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டணம் அதிகரிப்பு: தரிசன கட்டணம் உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் கட்டணங்கள் விசேஷ நாட்கள் இருமடங்காக வசூலிக்கப்படுகிறது. எனவே இதனை அறியாமல் விசேஷ நாள் என்று வரும் பக்தர்கள் ஏற்படும் இரு மடங்கு செலவு ஏற்படுகிறது. குடும்பத்துடன் வரும் பக்தர்கள் கட்டண தரிசன வழியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.