உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணப்பாறை வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை செய்த இஸ்லாமியர்கள்

மணப்பாறை வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை செய்த இஸ்லாமியர்கள்

மணப்பாறை: மணப்பாறை அருகே வெங்கடேச பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை எடுத்துச் சென்று இஸ்லாமியர்கள் வழங்கினர்.

திருச்சி, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக, வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணத்துக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொடுத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேசபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து, நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் மாலை, வெங்கடேசபெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதற்காக, வளநாடு ஜமாத் நிர்வாகம் சார்பில், திருக்கல்யாண நிகழ்வுக்கு சீர்வரிசையாக, தேவையான மலர்மாலைகள், தேங்காய், வாழைப்பழம், பழங்கள், உப்பு, அரிசி, பருப்பு, நெய், பீரோ ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, ஏராளமான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்களை கோவில் வாசலில் ஊர் பொதுமக்களும், கோவில் நிர்வாகிகளும் வரவேற்றனர். கோவில் நிர்வாகிகளிடம் சீர்வரிசை பொருட்களை இஸ்லாமியர்கள் ஒப்படைத்தனர். பின் கோவில் நிர்வாகம் சார்பில், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டு, திருக்கல்யாண பிரசாதம் லட்டு வழங்கப்பட்டது. மதநல்லிணக்கத்தின் அடையாளமாக இந்த நிகழ்வை, அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !