5 தலைமுறையாக வணங்கி வந்த சமணர் தீர்த்தங்கரர் சிலை அகற்றம்; பொதுமக்கள் அதிர்ச்சி
நரிக்குடி; நரிக்குடி இருஞ்சிறையில் 5 தலைமுறைகளாக வணங்கி வந்த சமணர் தீர்த்தங்கரர் மகாவீரர் சிலை அகற்றப்பட்டதால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
நரிக்குடி இருஞ்சிறை கிராமத்தில் முனியாண்டி கோயிலில் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் மகாவீரர் சிலை இருந்தது. 5 தலைமுறைகளாக வணங்கி வந்தனர். இந்நிலையில் எந்த அறிவிப்பும் இன்றி போலீஸ் பாதுகாப்புடன், தாசில்தார் பாண்டிசங்கர்ராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் சமணர் தீர்த்தங்கரரான மகாவீரர் சிலையை அகற்றினர். இதனை எதிர்பார்க்காத கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வருவாய்த்துறையினர் கூறியதாவது: மகாவீரர் சிலையை அகற்றி விருதுநகர் அருங்காட்சியத்தில் ஒப்படைக்க 2 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. அதற்கான அரசு உத்தரவு பெறப்பட்டு, தற்போது அகற்றப்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில்: 5 தலைமுறைகளாக மகாவீரர் சிலையை வழிபட்டு வருகிறோம். எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் சிலையை அகற்றிச் சென்றது அதிர்ச்சியாக உள்ளது. எதற்காக அகற்றினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அதிகாரியிடத்தில் உரிய காரணம் கேட்கப்படும், என்றனர்.
ஸ்ரீதர், பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர், கூறியதாவது: சமணர்களின் 24வது தீர்த்தங்கரரானவர் மகாவீரர். தலைக்கு மேலே அரை வட்ட வடிவிலான பிரபாவளி உள்ளது. இது ஞானத்தை குறிப்பதாகும். பிரபாவளிக்கு மேலே முக்குடை அமைப்பு உள்ளது. இதற்கு, நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் ஆகியவற்றை குறிப்பதாகும்.