12 ஆண்டு படிப்பை 2 மாதத்தில் முடித்தவர்!
கிருஷ்ணரும், பலராமரும் கம்சவதத்திற்குப் பிறகு சாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசம் செய்தனர். இங்குதான் கிருஷ்ணர் குசேலரின் நட்பை பெற்றார். இருவரும் சேர்ந்து குரு சேவையில் ஈடுபட்டனர். சகல வித்தைகளுக்கும் ஆதாரம் கடவுள் தான் என்றாலும், குருபக்தி ஒருவனுக்கு அவசியம் என்பதை உலகிற்கு உணர்த்த கிருஷ்ணர் குருகுலத்தில் சேர்ந்ததாக பாகவதம் கூறுகிறது. இருந்தாலும், கிருஷ்ணருக்கு அவதாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய இருந்ததால், மரபை மீறவும் செய்தார். ஒருவன் பன்னிருஆண்டுகள் குருகுலவாசம் செய்வது மரபு. ஆனால், கிருஷ்ணரும், பலராமரும் 64 நாட்கள் மட்டும் குருகுலத்தில் இருந்து நாளைக்கு ஒரு சாஸ்திரமாக கற்றனர். இதன்பின், சாந்தீபனி முனிவர் கிருஷ்ணரின் தெய்வீகசக்தியை உணர்ந்து கொண்டார். குருதட்சணையாக, கடலில் அடித்துச் சென்ற தன் பிள்ளையை உயிருடன் மீட்டுத்தரும்படி கேட்க, கிருஷ்ணரும் அப்படியே செய்து கொடுத்தார்.