வீரபாண்டியில் கோமாளி அரங்கன் கோவில் பாதயாத்திரை விழா
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியில் கோமாளி அரங்கன் கோவில் பாதயாத்திரை விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த வாரம் கோமாளி அரங்கன் பாதயாத்திரை தொடக்க விழா நடந்தது. விழாவை ஒட்டி விநாயகர் வழிபாடு, திருமாலை அணிதல் நிகழ்வுகள் நடந்தன. கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்த கோமாளி அரங்கன் கோவில் பக்தர்கள், நிறைவு நாளில், மாரியம்மன் கோவிலில் இருந்து கோமாளி அரங்கன் கோவிலுக்கு தீர்த்த கலசங்கள் மற்றும் ஸ்ரீ ராமர், சீதை மற்றும் இலக்குவன், அனுமன் சிலைகளுடன் திருவீதி உலா பாதையாத்திரை புறப்பட்டனர். இந்த குழுவினருக்கு சாமநாயக்கன்பாளையம் ஆண்டாள் திருக்கோவில், காளிபாளையம் திருமலைராயப்பெருமாள் திருக்கோவில், ஒன்னிபாளையம் விநாயகர் திருக்கோவில்களில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டன. மதியம் கோமாளி அரங்கனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்தன. தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பஜனை குழுவினரின் பஜனைகள் நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.