பட்டமங்கலத்தில் பங்குனித் திருவிழா; மார்ச் 24 ல் தேரோட்டம்
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலத்தில் அழகு சவுந்தரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு மார்ச்24 ல் தேரோட்டம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 6 ல் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் பூதமெடுப்பு, பிடிமண் கொடுத்தல் நடந்தது மறுநாள் விழாவிற்கான முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. தொடர்ந்து சைவ முனீஸ்வரருக்கு பூஜை, அய்யனார் கோயில், விநாயகர் கோயிலுக்கு பூதமெடுப்பு நடந்தது. மார்ச் 15 ல் பூச்சொரதலை முன்னிட்டு மதியாத கண்ட விநாயகர் கோயிலிருந்து உற்ஸவ விநாயகர், அழகு சவுந்தரியம்மன் கோயில் புறப்பாடு நடந்தது. மார்ச் 16 ல் அழகு சவுந்தரி அம்மன் கோயிலில் காலை 11:00 மணிக்கு காப்பு கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து காலையில் கேடகத்தில் அம்மன் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் வீதி உலாவும் நடந்து வருகிறது. நேற்று 3ம் திருநாளை முன்னிட்டு இரவு அன்ன வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. மார்ச் 22ல் பக்தர்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெறும். மார்ச் 24 மாலையில் தேரோட்டமும், மார்ச் 25 காலையில் மஞ்சுவிரட்டு, இரவில் பூப்பல்லக்கும், மறுநாள் காலையில் ரிஷப வாகனத்தில் புறப்பாடும், காப்புகளைதலும் நடைபெறும். இரவில் ஊஞ்சல் விழாவுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடையும். ஏற்பாட்டினை பட்டமங்கலம் நாட்டார், நகரத்தார் செய்கின்றனர்.