பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சந்தனம், பால்குட விழா
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சந்தனம் மற்றும் பால்குட விழா நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் ஏப்.27 மாலை வைகை ஆற்றில் இருந்து கோயிலுக்கு திரும்பினார். இதனையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு வாணியர் உறவின் முறையார்கள் சார்பில், பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் வைகை ஆற்றில் இருந்து இளநீர் காவடி, பால் மற்றும் சந்தன குடங்களை பக்தர்கள் சுமந்து வந்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து சுந்தரராஜ பெருமாள் கோயிலை அடைந்தனர். அங்கு காலை 10:30 மணி தொடங்கி மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காவல் தெய்வம் கருப்பணசாமிக்கு சந்தன அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனைக்கு பின் பிரசாரங்கள் வழங்கப்பட்டன. இரவு 7:00 மணிக்கு பெருமாள் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார். தொடர்ந்து பல்வேறு மண்டக படிகளில் சேவை சாதித்து காலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்தார்.விழாவில் சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஷ்டிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.