பல்லடம் தண்டபாணி கோவிலில் ஒரு ஆண்டுக்கு பின் திருப்பணி துவக்கம்!
பல்லடம்; பல்லடம் விநாயகர் தண்டபாணி கோவிலில், ஒரு ஆண்டுக்குப் பின், திருப்பணி துவங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
பல்லடம் மங்கலம் ரோட்டில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் மற்றும் பாலதண்டபாணி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பக்தர்கள் பலரின் பங்களிப்புடன் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அறநிலையத்துறையின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, கோவிலின் பழைய கட்டடங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டன. பாலாலயம் முடிந்ததால், எப்படியும் திருப்பணி துவங்கிவிடும் என பக்தர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், வரைபட அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த ஒரு ஆண்டாகவே திருப்பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது. கோவில் கட்டுமான பணிகள் துவங்க வேண்டிய இடத்தில் களைச்செடிகள் முளைத்து வந்தன. இச்சூழலில், அறநிலையத்துறை மூலம் திருப்பணி துவங்குவதற்கான ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று காலை, 8.00 மணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. கோவில் விழா குழுவினர், பக்தர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பாலாலயம் முடிந்து ஒரு ஆண்டாக திருப்பணிகள் துவங்கவில்லை. இதனால், இக்கோவிலில், ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த விழாக்கள் பலவும் தடைபட்டன. தற்போது, பூமி பூஜை நடந்துள்ள நிலையில், பணிகளை மீண்டும் கிடப்பில் போடாமல், திருப்பணிகளை விரைவுபடுத்தி, கும்பாபிஷேகத்தை விமர்சையாக நடத்த வேண்டும் என்பதே பக்தர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.