முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ., 2 அன்று கந்த சஷ்டி விழா காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் முருகன் பல்வேறு அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். நேற்று இரவு சக்திவேல் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று மாலை 4:00 மணிக்கு முருகன் சக்தி வேலுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது கோயில் முன்பு வைகை ஆற்றங்கரையில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூரபத்மன் கஜமுகம், சிங்கமுக, அரக்க வடிவம் மற்றும் சேவல் வடிவெடுத்து வந்தார். அலை கடலென திரண்ட பக்தர்கள் மத்தியில் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல் பாரதி நகர் மற்றும் பால்பண்ணை முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு தெய்வானை, முருகன் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.