மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம்
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலயம் நடந்தது.
முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் கடந்த 2013ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. தற்போது, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததால், வரும் ஏப்ரல் 4ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதனையடுத்து, கும்பாபிஷேக பணிகளுக்காக, பாலாலய பூஜை நேற்று மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, இறை அனுமதி பெற்று, தான்தோன்றி விநாயகர், இடும்பன், ஆதி மூலவர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, மருதாச்சல மூர்த்தி, சண்டிகேஸ்வரர், வரதராஜ பெருமாள், ராஜகோபுரம் ஆகிய ஒன்பது கோபுரங்களுக்கு, சக்தி அழைத்து, கோபுரங்களின் சக்தியை கலசங்களில் பெற்று, கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து, யாகசாலையில் வைத்து, முதற்கால யாக வேள்வி நடந்தது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் இரண்டாம் கால யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, அத்தி மரத்தில் செதுக்கப்பட்ட கோபுரத்திற்கு, கலசத்தில் இருந்து சக்தியை உருவேற்றி, ஆவாகனம் செய்யப்பட்டது. மஹா தீபாராதனையுடன் பாலாலயம் நிறைவு பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்.