திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம்
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் சத்சங்கம் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் ராமநவமி விழாவில் நேற்று ரங்கஞ்சி சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 60ம் ஆண்டு ராமநவமி வசந்தோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தினசரி காலை சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, 7:30 மணிக்கு பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் குமாரர் ஸ்ரீ ரங்கன்ஜி உபன்யாசம் நடக்கிறது. நேற்று மாலை சுவாமி ஆஞ்சநேயர் ரத்தினாங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7:30 மணிக்கு பரனுர் ஸ்ரீ ரங்கன்ஜி சுவாமிகள், துளசிதாசர் சரித்திரம் குறித்து விளக்க உரையாற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 29ம் தேதி வரை தினசரி இரவு ஏழு முப்பது மணிக்கு உபன்யாசம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 30ம் தேதி ராமர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.