உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜர் கோவிலில் கருடசேவை கோலாகலம்; கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

காஞ்சி வரதராஜர் கோவிலில் கருடசேவை கோலாகலம்; கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை உத்சவத்தில், தங்க சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலையில், ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் எழுந்தருளி உலா வந்தார்.


மூன்றாம் நாளான இன்று காலை, கருடசேவை உத்சவம் கோலாகலமாக நடந்தது. கோபுர தரிசனத்தை காண அதிகாலை 3:00 மணியில் இருந்தே பக்தர்கள் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபம் பகுதியில் குவிய துவங்கினர். அதிகாலை 4:50 மணிக்கு, கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். பெருமாளை தரிசித்ததும், பக்தர்கள் வரதா, வரதா, அத்தி வரதா என்ற திருநாமத்தை உச்சரித்தவாறு, நைவேத்யம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து, வரதராஜ பெருமாள் சன்னிதி தெரு, சி.எஸ்.செட்டித் தெரு, விளக்கடி கோவில் தெரு, முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், ராஜ வீதி, காமராஜர் வீதி, காந்தி சாலை வழியாக சென்று, மதியம் 1:20 மணிக்கு கோவிலை சென்றடைந்தார். காஞ்சிபுரத்தில் இன்று வழக்கத்தைவிட வெயிலில் தாக்கம் அதிகரித்து இருந்தது. இருப்பினும், வழிநெடுகிலும் பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கருட வாகனத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மாலை ஹனுமந்த வாகன உத்சவம் நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான வரும் 17ம் தேதி தேரோட்டமும், 19ம் தேதி காலை, அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரியும் உத்சவமும் நடக்கிறது. பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி, கோவில் பணியாளர்கள், கோவில் பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !