சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறையில் குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரித்ததால், மலையேறும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அதிகாலை, 4:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, மலையேற அனுமதிக்கப்பட்டது. சிரமமின்றி பக்தர்கள் மலையேறினர்.
கோவிலில் சுந்தர மகாலிங்கத்திற்கு, 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அடிவாரத்தில் தனியார் மடங்களிலும், மலையில் கோவில் நிர்வாகமும் அன்னதானம் வழங்கினர். காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை, விருதுநகர் எஸ்.பி., கண்ணன் திறந்து வைத்தார். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், மதுரை, தேனி, விருதுநகர், உட்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலைத்துறையினர், அனைத்து அரசு துறையினர் செய்திருந்தனர். மதுரை, விருதுநகர் மாவட்ட போலீசார், மேகமலை புலிகள் காப்பக வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலையடி வாரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட, எட்டு ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு, அதில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டதால், நான்கு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய சிரமம் குறைந்தது. மலையேற ஒரு பாதையும், அடிவாரம் திரும்ப மற்றொரு பாதையும் என இருவழிப்பாதை அமைக்கப்பட்டதால், பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து சென்றனர். விருதுநகர் மாவட்ட கலெக்டர், போலீஸ் துறையின் இந்த நடவடிக்கை பக்தர்களிடம் வரவேற்பை பெற்றது.