100 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ராமர் பட்டாபிஷேக கொலு பொம்மைகள்
நவராத்திரி கொலு மிக விசேஷமாக கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. பல நுாற்றாண்டு காலமாக கொலு வைக்கும் பழக்கம் புதுச்சேரியில் இருந்ததற்கான அடையாளமாக, புதுச்சேரி, துய்மா வீதியில் உள்ள எக்கோல் பிரான்ஸ்சே எக்ஸ்ட்ரீம் ஓரியண்ட் பிரெஞ்சு கல்வி நிறுவனத்தில் நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் பட்டாபிஷேக கொலு பொம்மைகள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதில், ராமர், சீதா, விசுவாமித்திரர், ஆஞ்சநேயர், நாரதர் உள்ளிட்டவர்களின் சிறிய அளவிலான பொம்மைகள் மிக ரசனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் களிமண்ணால் செய்து, பின் தீயில் சுடப்பட்டு, இலை, தழைகளில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கை வண்ணங்கள் பூசப்பட்டுள்ளது.இந்த பொம்மைகள் புதுச்சேரி குயவர்பாளையத்தில் வசித்த வைத்தி (பத்தர்) பொற்கொல்லர் என்பவர் வீட்டில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன், கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் குயவர்கள் என்று அழைக்கப்படும் மண்பாண்ட கலைஞர்கள் அதிகமாக வசித்ததால், காராமணிகுப்பத்தை (போன்கரே வீதி) சின்ன குயவர்பாளையம், தற்போது லெனின் வீதி என்று அழைக்கப்படும் பகுதியை பெரிய குயவர்பாளையம் என்று பிரெஞ்சு ஆட்சியாளர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.மேலும் இந்த மண்பாண்டக் கலைஞர்களில் திறமையானவர்களை கண்டறிந்து பிரெஞ்சு அதிகாரிகள் மிகுந்த மரியாதையுடன் நடத்தி, தங்களுக்கு தேவையான மண்பாண்ட பொருட்களை செய்து வாங்கியுள்ளதாக வர லாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.இதுமட்டுமின்றி ஏராளமான வெண்கலம் மற்றும் பித்தளை சிலைகள் மற்றும் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளது.