உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தேரில் பூதத்தாழ்வார் உலா மாமல்லபுரத்தில் கோலாகலம்

திருத்தேரில் பூதத்தாழ்வார் உலா மாமல்லபுரத்தில் கோலாகலம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் திருத்தேரில் உலா சென்று, கோலாகல உத்சவம் கண்டார்.


மாமல்லபுரத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில், வைணவ 108 திவ்ய தேசங்களில், 63வது தேசமாக விளங்குகிறது. இதே ஊரில் அவதரித்த பூதத்தாழ்வார், இக்கோவிலில் தனி சன்னிதியில் வீற்றுள்ளார். இங்கு ஆண்டுதோறும், பூதத்தாழ்வாருக்கு கொண்டாடப்படும் அவரது ஜெயந்தி உத்சவம், கடந்த 22ம் தேதி துவங்கியது. தினமும் திருமஞ்சனம் கண்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை, திருவாய்மொழி சாற்றுமறை சேவை ஏற்று, வீதியுலா செல்கிறார். நேற்று, திருத்தேரில் கோலாகல உலா சென்றார். காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறந்து, வழக்கமான பூஜைக்குப் பின், ரத பிரதிஷ்டை ஹோமம் நடத்தி, 5:45 மணிக்கு பூதத்தாழ்வார் திருத்தேரில் எழுந்தருளி வழிபாடு கண்டார். காலை 8:15 மணிக்கு, பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். பின், மாடவீதிகளில் பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். 11:00 மணிக்கு, தேர் நிலையை அடைந்தார். ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஐப்பசி திருவோண நாளான நேற்று, பொய்கையாழ்வார் ஜெயந்தி நாளும் என்பதால் மாலை, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடை பெற்றது. ஸ்தலசயன பெருமாள் பொய்கையாழ்வாருக்கு பரிவட்ட மரியாதை அளித்தார். தொடர்ந்து, சுவாமியர் வீதியுலா சென்றனர். பூதத்தாழ்வார் ஜெயந்தி நாளான இன்று காலை 6:00 மணிக்கு, திருமஞ்சனம் கண்டு, 8:30 மணிக்கு ரத்னாங்கி சேவையாற்றி, பிற சுவாமியரின் மங்களாசாசனம் ஏற்கிறார். தொல்லியல் வளாக ஞானபிரான் சன்னிதியில், இன்று காலை 11:00 மணிக்கு மங்களாசாசனம் ஏற்று வீதியுலா செல்கிறார். மாலை 4:00 மணிக்கு, அவதார நந்தவனத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டு, திருப்பாவை சாற்றுமறை சேவையேற்று, இரவு 8:00 மணிக்கு, ஸ்தலசயன பெருமாளுடன் வீதியுலா செல்கிறார். நாளை, விடையாற்றி உத்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !