உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டை காக்கும் துர்கா பரமேஸ்வரி

காட்டை காக்கும் துர்கா பரமேஸ்வரி

தட்சிண கன்னடா பெல்தங்கடி தாலுகாவில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அருகே அமைந்து உள்ளது. கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. கோவிலின் முக்கிய தெய்வமாக துர்கா பரமேஸ்வரி உள்ளார். துர்காதேவி கோவில் எனவும் அழைக்கின்றனர்.


அமைப்பு கோவில் தென்னிந்திய கட்டட கலையை பிரதிபலிக்கிறது. கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகே அமைந்து உள்ளது. மலைகளுக்கு நடுவே காட்சி தரும் கோவிலுக்கு எதிர் திசையில் நேத்ராவதி ஆறு ஓடுகிறது. எனவே, இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் அமைந்துள்ள இடத்தை பார்த்ததுமே மன நிம்மதி ஏற்படும். அந்த அளவிற்கு இயற்கை எழிலில் கோவில் காட்சி அளிக்கிறது.


இந்த கோவில் அருகே 5 ஏக்கர் பரப்பளவில், ‘தேவரகாடு’ எனும் வனப்பகுதி உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் வவ்வால்கள் உள்ளன. இந்த காட்டுப் பகுதிக்கு செல்வதற்கே மக்கள் அச்சம் அடைவர். ஏனெனில், இங்கு தீயசக்தி இருப்பதாக நம்புகின்றனர். தீயசக்திகளிடம் இருந்து துர்கா தேவி பாதுகாப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். காட்டையும், வீட்டையும் பாதுகாக்கும் துர்கா தேவி என, பக்தர்கள் அழைப்பதை கோவில் வளாகத்தில் நம்மால் கேட்க முடியும்.


இங்கு விநாயகர், சுப்பிரமணியர், நாக தேவதைகளுக்கும் சன்னிதிகள் உள்ளன. தசராவின் போது கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அமாவாசை, வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கோவில் காலை 6:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.


இந்த கோவில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும், இன்றும் கம்பீரமாக காட்சி அளிப்பதை நம்மால் பார்க்க முடியும். கோவிலுக்கு சாதாரண நாட்களில் வரும் பக்தர்கள் பெரும்பாலும் உள்ளூர் வாசிகளாகவே இருக்கின்றனர். பண்டிகை நாட்களில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். எப்படி செல்வது? 


பஸ்: முதலில் தட்சிண கன்னடா பஸ் நிலையத்திற்கு வரவும். அங்கிருந்து டாக்சி மூலம் 40 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.


ரயில்: எங்கிருந்தாலும் எடுகேமேரி ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் 60 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !