உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்!

சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்!

சுசீந்திரம்:சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமிக்கு வரும் 11ம் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி அதிக சக்தி உள்ளவராக பக்தர்களால் நம்பப்படுகிறார். வெண்ணை, வடை, வெற்றிலை பிரியரான ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வடை, வெற்றிலை மாலைகளை அணிவித்தும், வெண்ணையை சமர்ப்பித்தும் வழிபடுகின்றனர். இங்கு ஆஞ்சநேயர் சுவாமி சிலையை நிறுவிய நாள் மற்றும் ஜெயந்தி விழா என்று ஆண்டுக்கு இரண்டு நாட்கள் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது, இதில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் விழா வரும் 10ம் தேதி துவங்குகிறது. முதல் நாள் காலை கணபதி ஹோமம், 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட விநாயகருக்கு தீபாராதனை ஆகியன நடக்கிறது. இரண்டாம் நாள் விழாவான 11ம் தேதி காலை 4 மணிக்கு ஸ்ரீராமனுக்கு அபிஷேகம், 6 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு ஷோடச அபிஷேகம் நடக்கிறது. இரண்டாயிரம் லிட்டர் பால், தயிர், நெய், தேன், இளனி, பஞ்சாமிர்தம், திருநீறு, குங்குமம், களபம், சந்தனம், மாதுளம் சாறு, எலுமிச்சை சாறு, கரும்பு சாறு போன்ற 16 வகையான பொருட்களால் தொடர்ந்து பகல் 11 மணிவரை சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு ஸ்ரீராமனுக்கு புஷ்பாபிஷேகம், 6.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் ஆகியன நடக்கிறது. பக்தர்களால் கொண்டுவரப்படும், கிரேந்தி, வாடாமல்லி தவிர ஏனைய பூக்களான தாமரை, துளசி, செவ்வந்தி, பிச்சி, தெற்றி, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வகை மலர்களால் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து ராம- ஆஞ்சநேய பக்தர் சங்கத்தின் பஜனை, காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து அறுசுவை அன்னதானம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஆஞ்சநேய பக்தர் டிரஸ்டியினரும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !