காஞ்சியில் மூன்று நாட்கள் நடைபெறும் திருமுறை திருவிழா துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் மஹால் மற்றும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும், திருமுறை திருவிழா துவங்கியது.
நிகழ்ச்சிகள் ஆதீனங்கள் ஆசி வழங்கும் நிகழ்வு, பட்டிமன்றம், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு திருக்கல்யாணம், 508 சிவாச்சாரியார்கள் பங்கேற்கும் சிவபூஜை உள்ளிட்டவை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று, சத்தியா பச்சையப்பன், சிந்துஜா முருகேஷ், இந்துமதி மேகநாதன், தேவகி வேணுகோபால், சாந்தி செல்வம் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். விழா தலைமை நிர்வாகி பச்சையப்பாஸ் சில்க்ஸ் தலைவர் பிரபு வரவேற்றார். காஞ்சிபுரம் துளுவ வேளாளர் சங்க தலைவர் சிங்காரம், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்க தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர், காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் பெருமாள். காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் சிவகுரு, காஞ்சிபுரம் தொண்டை மண்டல வேளாளர் சங்க தலைவர் குமரேசன், திருத்தணி தொண்டை மண்டல வேளாளர் சங்க தலைவர் ஜானகிராமன், அனைத்து முதலியார் சங்க தலைவர் எழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா ஒருங்கிணைப்பாளர் முருகேஷ், சம்பத் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
காலை 11:00 மணிக்கு மணமாலை நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு தேவகோட்டை ராமநாதன், நடுவராக பங்கேற்ற, நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. இன்றும், நாளையும் இரண்டாம் நாள் விழாவான இன்று வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ், லைப் கேர் ஆஸ்பிட்டல் நிறுவனர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். மாலை 3:00 மணிக்கு நடக்கும், ஆதீனங்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தருமை ஆதீனம் தலைமை வகிக்கிறார். காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்து அதிபர், பேரூர் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களின் ஆசியுரை, ஆன்றோர், சான்றோருக்கு பாராட்டுரை நடைபெறுகிறது. மாலை 4:00 மணிக்கு அருணை பாலறாவாயனுக்கு வேளாளர் குல மாணிக்கம் சைவ சித்தாந்தம் என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. நிறைவு நாளான நாளை காலை 5:00 மணிக்கு தீட்சை பெற்ற 508 சிவாச்சாரியார்கள் பங்கேற்று சிவபூஜை செய்கின்றனர். 6:00 மணிக்கு ஓதுவார்கள் மூலம், திருமுறை பேழை வழிபாடும், 7:00 மணிக்கு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு திருக்கல்யாண உத்சவம் துவங்குகிறது. திருக்கல்யாண உத்சவத்தை தமிழ் புலவர் கு.ஞானசம்மந்தம் தொகுத்து வழங்குகிறார். விழாவில், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கந்தபரம்பரை நாச்சியார் கோவில் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஆசியுரை வழங்குகின்றனர்.