உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் இராபத்து உற்சவம் நிறைவு

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் இராபத்து உற்சவம் நிறைவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில்;, வைகுந்த ஏகாதசி விழாவின் இராபத்து உற்சவம், பரமபத வாசல் திறக்கப்பட்டு, படியேற்ற சேவை, நம்மாழ்வார் திருவடி தொழுதல் (ஆழ்வார் மோட்சம்) நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.


மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்யதேசங்களில் 22-வது தலமான  திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் உள்ளது. காவிரிக் கரையோரம் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோயில்களில் 5-வது அரங்கமான,  இக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிச.20-ஆம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. டிச.30-ஆம் தேதி வைகுந்த ஏகாதசி நடைபெற்ற நிலையில், டிச.31-ஆம் தேதி இராபத்து உற்சவம் தொடங்கியது. விழாவில் தினசரி உள்பிரகார பெருமாள் புறப்பாடு, படியேற்ற சேவை ஆகியன நடைபெற்றது. இராபத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று பெருமாள் உற்சவ மூர்த்திகள்; சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபத வாசலில் வேத விண்ணப்பம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பரமபத வாசல் திறக்கப்பட்டு, அந்த வழியாக பெருமாள் ஏகாதசி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார். அங்கு நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், பொய்கை ஆழ்வார், மணவாள மாமணிகள் மற்றும் வேதாந்த தேசிகர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டு, ஆழ்வார்களுக்கு அருளிப்பாடு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, 3 முறை பத்தி உலா செய்து திருவந்தி காப்பு நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை எம்பி.சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு  பெருமாளை சேவித்தனர். இரவு ஆழ்வார் மோட்சம் எனப்படும் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நிகழ்வு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !