மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பழமையான வன்னிமரம் சாய்ந்தது
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு சாய்ந்தது.
மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் இருந்து ஆடிவீதிக்கு செல்லும் வழியில் இடதுபுறம், வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதி உள்ளது. இச்சன்னிதியை ஒட்டியே திருஞானசம்பந்தரின் சைவ சமய ஸ்தாபிதம் வரலாற்று லீலை நடக்கும். நேற்று அதிகாலை, கோவில் பகுதியில் மழை பெய்ததில் சன்னிதியின் பழமையான வன்னிமரம் வேரோடு சாய்ந்தது பக்தர்களை அதிர்ச்சிடைய வைத்துள்ளது. மண்ணின் ஈரப்பதம் மற்றும் அதிக எடை காரணமாக சாய்ந்தது தெரிந்தது. கோவில் நிர்வாகம் தரப்பில், ‘மரம் பசுமையாக நன்றாக உள்ளதால், கிளைகளை அகற்றி எடையை குறைத்து மீண்டும் நடப்படும்’ என்றனர். ஹிந்து மக்கள் கட்சி, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறுகையில், “கோவில் நிர்வாகம், வன்னிமரம் அருகே பல ஆண்டுகளாக பிரசாதங்களை தயார் செய்து வருகிறது. இதனால் வெளியேறும் வெப்பத்தால், மரத்தின் இலைகள் பட்டுப்போயின. இதுகுறித்து, இரு ஆண்டுகளுக்கு முன் கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்தேன்; நடவடிக்கை இல்லை. இனியாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்றார்.