ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெருவில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். 2013 முதல் பக்தர்கள் வசதிக்காக கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் ரதவீதியில் சிரமம் இன்றி நடந்து சென்றனர். கடந்த 3 ஆண்டுகளாக கோயில் நான்கு ரதவீதி, சன்னிதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை சாலை இருபுறமும் 150க்கு மேலான கடைகளால் ஆக்கிரமித்து இருந்ததால், பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தியாக வந்தது. இதனையடுத்து பிப்., 5ல் அனைத்து ஆக்கிரப்பு கடைகளும் அகற்றப்பட்டு, பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்நிலையில் சில நாட்களாக சன்னதி தெரு சாலையில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனை அகற்றாவிடில், பக்தர்கள் செல்ல முடியாதபடி மேலும் பலகடைகள் அமைத்து ஆக்கிரமித்து விடுவார்கள். இதனால் பக்தர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாக உத்தரவிட வேண்டும்.