கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோவில் தேரோட்டம்
அரியலுார்: கல்லங்குறிச்சி கலியுக ஸ்ரீவரதராசப் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது.
வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்த பெற்ற, 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட தென்கலை அமைப்பை சேர்ந்த அரியலுார் கல்லங்குறிச்சி ஸ்ரீவரதாராசப் பெருமாள் கோவில் ஆண்டு பெருவிழா, ஸ்ரீராம நவமி அன்று அதிகாலை கொடியேற்றுத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்தாண்டு, மார்ச், 27ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
உற்சவர் ஸ்ரீகலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. தேரில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் உற்சவர் கலியுக ஸ்ரீவரதராசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 6:00 மணிக்கு நிலையத்தில் இருந்த புறப்பட்ட தேர், 8:00 மணிக்கு மீண்டும் நிலையத்துக்கு வந்தடைந்தது. மற்றொரு தேரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வந்திருந்த திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் பக்தர்கள் மொட்டையடித்து பசு மற்றும் ஆடு, கோழி, நெல், நவதானியங்கள் ஆகியவற்றை தானமாக வழங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.