உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றுமையை வலியுறுத்தும் தேர்த்திருவிழா

ஒற்றுமையை வலியுறுத்தும் தேர்த்திருவிழா

உடுமலை: பக்தியையும், ஒற்றுமையையும் பக்தர்களுக்கு வழங்குவது தேர்த்திருவிழாவின் சிறப்பாகும்.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’, தேர் கோபுர வடிவத்தில் அமைந்த மேற்பகுதியைக் கொண்டது. நமக்கு புண்ணியம், தேடித்தர திருத்தேர் திருவீதியில் உலா வருகிறது.

தேரை அருகில் சென்று கவனித்தால், அருமையான தச்சுவேலையில் தசாவதாரம், ராமாயணம், சிவ லீலைகள், கீதா உபதேசம், கந்த லீலைகள் இப்படி நம் அரிய இதிகாச, புராணக் காட்சிகளைப் பார்க்கலாம்.

கோவிலுக்குள்ளே கற்சிற்பங்கள் என்றால், வெளியே தேரில் மர வேலைப்பாடுகள், கலை நுணுக்கம் மிகுந்த கவினுறு காட்சிகள் காணப்படுகின்றன.

தேர்வலம் வரும் வீதிகளை ‘தேரோடும் வீதி’ என அழைக்கப்படுகிறது. வீதி வலம் வரும் போது, ஒவ்வொரு வீதியின் முடிவிலும் நேரே சிறிது சந்து செல்லும். அதை ‘வடம் போக்கிச் சந்து’ என்பார்கள்.

கீழ வீதியில் செல்லும் தேரை, அந்தந்த தெருக் கோடியில் உள்ள வடம் போக்கிச் சந்து தொடங்கும் வரையில் இழுத்துச் சென்று, வடத்தை வெளியே எடுத்து வந்து, தெற்கு வீதியில் இழுக்கத் தொடங்குவார்கள்.

இப்படியே தேர் செல்லும் போது, ஆங்காங்கே வீட்டு வாசலில் அர்ச்சனைக்கு வழங்கும், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, சூடத்தைத் தேர் மேலே இருப்பவர்கள், கயிற்றில் தொங்கு கூடையில், வாங்கி மேலே இழுத்து அதே போல் திருப்பித் தருவார்கள்.

தேர் ஆடியாடி வருவதே தனியழகு. அசைந்தாடிகள், அலங்காரங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவையாக இருக்கும். வீதியெல்லாம் மக்கள் வெள்ளமாய், ஆராவாரம் முழங்க இழுப்பதுதான் தேர்த்திருவிழாவின் தனித்துவம் ஆகும்.

திருத்தேரில் அம்மனை ஏற்றி எல்லோருமாக சேர்ந்து, உடல் உழைப்பினால் ஒற்றுமை உணர்வோடு ஒத்துழைத்து, தெருவெல்லாம் இழுத்து நிலைக்கு கொண்டு வந்து சேர்க்க, பொறுப்பேற்று பணியாற்றுவது பக்தியையும், ஒற்றுமையையும், பிரதிபலிக்கும் அருள்நெறி கொண்டதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !