திருப்புவனத்தில் சித்திரை திருவிழா 24ம் தேதி தொடக்கம்
திருப்புவனம்: திருப்புவனம் பாலகிருஷ்ணபெருமாள் கோயிலில் 128வது ஆண்டு சித்திரை பெருவிழா வரும் ஏப். 24ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்க உள்ளது.
திருப்புவனத்தில் சத்யபாமா ருக்மணி சமேத பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் வருடம்தோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம், சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகரை சுமந்து வரும் பக்தர்கள் திருப்புவனத்தில் அதிகம் வசிக்கின்றனர். கள்ளழகரை சுமந்து செல்ல கிளம்பும் முன் திருப்புவனம் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை கொண்டாடிய பின் கிளம்புவது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் 24ம் தேதி சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இரவு ஏழு மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது .26ம் தேதி காலை 9:05 மணிக்கு அழகர் பெருமாள் திருப்புவனம் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளார். 27ம் தேதி திங்கட்கிழமை இரவு ஏழு மணிக்கு வீரபத்திர சாமி கோயிலில் புஷ்பபல்லக்கில் எழுந்தருளுகிறார். 28ம் தேதி பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் யாதவ பண்பாட்டு கழகமும் செய்து வருகின்றனர்.