அவிநாசி அழகு நாச்சியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா
அவிநாசி: அவிநாசி கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் 2026ம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பூவோடு, மாவிளக்கு எடுத்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அவிநாசி கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 14ம் தேதி காப்புக்கட்டு, நந்தா தீபம் ஏற்றதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை,அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றது. இன்று பொங்கல் பூச்சாட்டு விழாவில் படைக்கலம் எடுத்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் நான்கு ரத திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து 18 அடி வேல் அலகு,வாள் அலகு குத்தி மூன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து ஊர்வலம் வந்தனர். நாளை மஞ்சள் நீர், அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவற்றுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. கங்கவர் வீதி மக்கள் மற்றும் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.