பாலக்காட்டில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாட்டம்
பாலக்காடு: ஸ்ரீ ஆதிசங்கரரின் அவதார தினத்தை முன்னிட்டு, பாலக்காடு சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலில் சங்கர ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் சாரதாம்பாள் கோவிலில் விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், சூக்த ஜபங்கள் மற்றும் உபநிஷத் பாராயணங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் சங்கர ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்வாக, கேரள பிராமண சபை கல்பாத்தி உபசபையும் பாலக்காடு சிருங்கேரி மடமும் இணைந்து நடத்திய நாமஜப வேத கோஷ யாத்திரை நடைபெற்றது. கோவில் நிர்வாக குழு தலைவர் கரிம்புழை ராமன் இந்த ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். கல்பாத்தி ராமத்யான மடத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் 12ம் தெரு, கல்செட்டி தெரு, சாத்தப்புரம், பழைய கல்பாத்தி, கோவிந்தராஜபுரம், வைத்தியநாதபுரம் மற்றும் புதிய கல்பாத்தி ஆகிய அக்ரஹார வீதிகள் வழியாகப் பிரதட்சணம் வந்து மீண்டும் ராமத்யான மடத்தை வந்தடைந்தது. வேத கோஷ யாத்திரைக்கு சிருங்கேரி வேத பாடசாலை ஆசிரியர்கள் நிர்மல் தாரஹாஸ், சாய்கிருஷ்ணா மற்றும் கார்த்திக் சேஷாத்ரி ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்வில் கேரள பிராமண சபா கல்பாத்தி உபசபை தலைவர் காசி விஸ்வநாதன், செயலாளர் சந்தான கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ராமன், செயலாளர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜன், கிருஷ்ணமணி, நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் பிரிவு செயலாளர் லலிதா கணேசன், ஷியாமளா ஆகியோர் பங்கேற்றனர்.