மாரியூரில் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர், பவள நிறவல்லியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற சிவாலயம் ஆகும். வருண பகவானால் பூஜிக்கப்பட்ட பழமையும் புரதான சிறப்பும் பெற்ற கோயிலில் சிவபெருமானின் 57வது படலமான வலை வீசும் திருவிழா கடலுக்குள் வைத்து நிகழ்த்தி காண்பிக்கப்படுகிறது.
சித்ரா பவுர்ணமி அன்று நடக்கக்கூடிய விழாவை முன்னிட்டு இன்று நந்தி பகவான் அருகே உள்ள கொடிமர பீடத்திற்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற மே 1., வெள்ளிக்கிழமை அன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயில் அருகே உள்ள மன்னார் வளைகுடா கடலில் வலை வீசும் புராண காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்திக் காண்பிக்கப்படுகிறது. பின்னர் தொல்லை தந்த சுறா மீனுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்டு உற்ஸவமூர்த்திகளான பவளநிறவல்லியம்மன், பூவேந்திய நாதருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நிகழ்த்தப்படுகிறது. காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின்பு சுவாமி புறப்பாடு உள்ளிட்டவைகள் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.