திருப்பரங்குன்றம் கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், அவனியாபுரம் கோயில்களில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது.
அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர், பால மீனாம்பிகை கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் இன்று நடந்தது. பால மீனாம்பிகை, கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண அலங்காரத்தில் எழுந்தருளினர். மாப்பிள்ளை வீட்டு பிரநிதியாக நாகசுப்பிரமணியன், பெண் வீட்டு பிரதிநிதியாக ராமசுப்பிரமணியன் திருமண சம்பிரதாயங்கள் நடத்தினர். பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. பூ பல்லக்கில் பால மீனாம்பிகை, கஜ வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர், பிரியாவிடை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலித்தனர்.
திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் முன்பு யாக பூஜை நடந்தது. சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி திருக்கல்யாணம் நடந்தது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பட்டாபிஷேக ராமர் கோயிலில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துவரப்பட்டது. யாக பூஜை முடிந்து காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.