கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் பால்குடம் ஊர்வலம்
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் 26 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 17 ஆம் ஆண்டு திருத்தேர் விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மகா கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், சாகை வார்த்தல் மற்றும் பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. 2ம் நாள் பூங்கரகம் மற்றும் அம்மன் வீதி உலா, அம்மனுக்கு வசந்த மண்டபத்தில் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. 3ம் நாள் விழாவாக நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று 4ம் நாள் விழாவாக பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு அம்மச்சாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 10 மணிக்கு அம்மச்சாரம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் எடுத்து சென்று செல்வ விநாயகர், சீனுவாச பெருமாள் மற்றும் அம்மச்சாரம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, வழக்கறிஞர் விஜய் மகேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், நாளை இரவு 10 மணிக்கு செல்வ விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், அம்மச்சாரம்மன் ஆகிய பஞ்சமூர்த்திகள் பூ பல்லக்கு ஊர்வலமும், வசந்த மண்டபத்தில் ஆராதனையும் நடக்க உள்ளது. முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் 10ம் தேதி காலை 8:30 மணிக்கு நடைபெற உள்ளது. விழா நடைபெறும் ஏழு நாட்களும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.