உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமான் கோவில் திருப்பணி துவங்க கால்கோள் விழா

அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமான் கோவில் திருப்பணி துவங்க கால்கோள் விழா

அவிநாசி: அவிநாசி மங்கலம் ரோட்டில் தாமரைக் குளம் கரைப்பகுதியில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் திருப்பணி கால்கோள் விழா நடைபெற்றது. 


கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரலாற்று சான்று உடையதாக விளங்கும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில்  அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ளது. முதலை உண்ட பாலகனை பாடல் பாடி மீட்டெடுத்த சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானுக்கு இங்கு கோவில், முதலை வாயில் இருந்து பிள்ளையை முழுவதுமாக உயிருடன் மீட்டெடுத்த தாமரை குளத்தின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளான நிலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து சுவர்களில் விரிசல் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மண்டபங்களில் உள்ள தூண்கள் இடிந்து விடும் நிலையிலும் இருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் மற்றும் மண்டபங்களை மராமத்து பணிகள் செய்து கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.


இதனையடுத்து, உபயதாரர்கள் மூலம் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் மற்றும் மண்டபம் திருப்பணி வேலைகள் துவங்க, கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி பூமி பூஜைகள் செய்தனர். தற்போது,ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டுமான திருப்பணிகள் துவங்கிட இன்று கால்கோள் விழா நடைபெற்றது.  இதில், பேரூர் தவத்திரு மருதாச்சல அடிகளார்,திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள்,சென்னை சில்க்ஸ் சிவலிங்கம், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன்,ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, மெஜஸ்டிக் கந்தசாமி, உதய்சங்கர், மேகலா சுப்பிரமணியம் மற்றும் உபயதாரர்கள்,ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஹர்ஷினி, கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !