உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.


சென்னையில் அமைந்துள்ள, வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொன்மையான தென்பழனிக்கு நிகராக, புகழ்பெற்று விளங்குகிறது வடபழனி ஆண்டவர் கோவில். இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று மாலை மூஷிக வாகன புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 7.35 மணிக்குமேல்  9 மணிக்குள்  துவஜா ரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, தினமும் காலை 7:00 மணிக்கு, மங்களகிரி விமான புறப்பாடு நடக்கிறது. இரவு மங்களகிரி விமானத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. விழாவின் இரண்டாம் நாள் காலை சூரிய பிரபை புறப்பாடு, இரவு சந்திர பிரபை புறப்பாடும் நடக்கிறது. 


பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான, 27ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. காலை 7.05 மணி முதல் 7:25 மணிக்குள் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. வைகாசி விசாகமான, 30ம் தேதி காலை வள்ளி தேவசேனா சமேத சண்முகர் வீதியுலா நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. பின், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. வரும், 31ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. விழாவில் தினமும் மாலை பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !