உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், தாட்டிதோப்பு, வரதராஜ சுவாமி நெசவாளர் குடியிருப்பு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

சின்ன காஞ்சிபுரம் தாட்டிதோப்பு, வரதராஜ சுவாமி நெசவாளர் குடியிருப்பில் ஒரே வளாகத்தில் செல்வ விநாயகர், சந்தவெளி அம்மன், மாகாளியம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவில்களில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 22ம் தேதி காலை 7:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோபூஜை உள்ளிட்டவையும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், முதல்கால யாகசாலை பூஜை விக்ரஹங்கள் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடந்தன.

நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம், வேதபாராயணமும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் காலை யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று காலை 7:30 மணிக்கு யாத்ராதான மஹா சங்கல்பம், நான்காம் காலை யாகசாலை பூஜை உள்ளிட்டவையும், காலை 10:00 மணிக்கு புனிதநீர் நிரப்பில கலசங்கள் புறப்பாடும், தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தி யங்கள் ஒலிக்க, வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து மஹா அபிஷேகமும், மஹா தீப ஆராதனையும், அன்னதானமும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !