உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயில் கல்துாணின் அலங்கார பகுதி உடைந்து விழுந்தது; பக்தர்கள் அதிர்ச்சி

மதுரை மீனாட்சி கோயில் கல்துாணின் அலங்கார பகுதி உடைந்து விழுந்தது; பக்தர்கள் அதிர்ச்சி

 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் சன்னதி பிரகாரத்தில் உள்ள கல்துாண் ஒன்றின் வேலைப்பாடு உடைய அலங்கார பகுதி உடைந்து விழுந்தது குறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.  இக்கோயில் கும்பாபிஷேகம் இந்தாண்டு செப்.,17ல் நடக்கிறது. இதற்காக திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கோயில் பிரகாரங்களில் உள்ள சிறிய சன்னதிகளின் திருப்பணிகளும் ஒருபுறம் நடக்கிறது. நேற்று மாலை முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் பிரகாரத்தில், குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை அருகேயுள்ள கல்துாண் ஒன்றின் அலங்கார போதிகை(துாணையும், மேல்தளத்தையும் தாங்கும் வேலைப்பாடு உடைய பகுதி) உடைந்து விழுந்தது. அச்சமயத்தில் அப்பகுதியில் பக்தர்கள் வராததால் யாருக்கும் பாதிப்பில்லை. தகவல் அறிந்த கோயில் ஊழியர்கள் உடைந்த பகுதியை அதே இடத்தில் வைத்து மீண்டும் கீழே விழாதபடி கம்பி கட்டியுள்ளனர். மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இப்பிரகாரத்தின் கற்துாணின் மேற்பகுதி இடிந்தது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருப்பணிக்காக பெயின்ட் ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோயில் சிற்பங்கள், துாண்களையொட்டி சாரம் கட்டப்பட்டது. அப்படி சாரம் கட்டியதால் கற்துாணின் அலங்கார பகுதி வலுவிழந்து விழுந்ததா என கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !