உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கலசங்களில் இருப்பது இரிடியம் அல்ல!

கோவில் கலசங்களில் இருப்பது இரிடியம் அல்ல!

பெரும்பாலான கோவில் கலசங்களில் உள்ளது, "இரிடியம் அல்ல; செம்பு என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை, எடைச்சித்தூரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த கேசவ பெருமாள் கோவிலில், கோபுர கலசத்தை திருடுவதற்காகச் சென்ற, சென்னை தம்பதி கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கலசத்தில் இரிடியம் இருக்கும் என நம்பி, திருட வந்ததாகக் கூறினர். இந்நிலையில், "பெரும்பாலான கோவில் கலசங்களில் இருப்பது இரிடியம் அல்ல; செம்பு என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மேலும், இரிடியம் இருப்பதாகக் கூறி, கோவில் கலசங்களை திருட முயற்சிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்துள்ளது.இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பல இடங்களில் கோவில்களில் உள்ள கலசங்களில், இரிடியம் இருப்பதாக நினைத்து திருடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கலசங்கள் செம்பால் செய்யப்பட்டவை; அதில், கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானியங்கள் வைக்கப்படுகின்றன. இதில், வரகு மின் கடத்தியாகச் செயல்படும். கோவிலுக்கு அருகில் இடி விழுந்தால், இடியை உள்வாங்கிக் கொண்டு, மண்ணுக்கு அனுப்பி விடும். இது அனைத்து செம்புக்கும் உரிய பண்பு.இந்த உண்மை அறியாமல், சில சோதிடர்கள் கூறியதை கேட்டு, கலசங்களை திருட முயற்சி செய்கின்றனர். கோவில் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !