அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED :4 days ago
கும்மிடிப்பூண்டி; கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
கவரைப்பேட்டை அருகே உள்ள அரியத்துறை கிராமத்தில், பழமைவாய்ந்த மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோத்சவ விழா, இம்மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, அன்ன வாகனம், அதிகார நத்தி, சிம்ம வாகனம், நாக வாகனம், திருக்கல்யாணம், ரிஷப வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட உற்சவங்களும், தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன. விழாவின் ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது. காலை 9:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட தேர், மாடவீதிகள் வழியாக வலம் வந்தது. தேரில், வரமூர்த்தீஸ்வரர் உற்சவ பெருமான் வீற்றிருந்தார். பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து, நெஞ்சுருக சிவபெருமானை வணங்கினர்.