கிணத்துக்கடவு காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் கடந்த, 27ம் தேதி, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், கலச பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், கோமாதா பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், முதற்கால யாக பூஜை, 108 திரவிய ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் ஆரம்பம் ஆனது. 28ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, அபிராமி அந்தாதி பாராயணம், சுவாமிக்கு கண் திறப்பு, பூஜை தீபாராதனை, விமான கோபுர கலசம் வைத்தல், மூன்றாம் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று 29ம் தேதி, நான்காம் கால யாக பூஜை, கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலை வலம் வருதல், காமாட்சி அம்மன் விமான கோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி பராசக்தி" என, கூறி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து விநாயகர், தலகொண்ட அம்மன், முருகன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தச தரிசனம், தீபாராதனை நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.