காளையார்கோவில் சோமேஸ்வரர் - சவுந்திரநாயகி கோயிலில் தேரோட்டம்
சிவகங்கை; காளையார்கோவில் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மே 21 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலையில் சுவாமி, அம்பாளுடன் வெள்ளி கேடகத்தில் வீதி உலா வந்தார். இரவில் வெள்ளி ரிஷபம், அன்னம், புஷ்ப பல்லக்கு, யானை, சிம்மம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒன்பதாம் நாளான இன்று அதிகாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சோமேஸ்வரர், மற்றொரு தேரில் சவுந்திரநாயகி, சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு பக்தர்கள் தேரடி திடலில் சிதறு தேங்காய் உடைத்து வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, காலை 11:00 மணிக்கு நிலையை அடைந்தது. சிவகங்கை எம்.எல்.ஏ., குழந்தைராணி, கோயில் கண்காணிப்பாளர் பாலசரவணன் பங்கேற்றனர். ஸ்தானிகம் ரத்தின காளீஸ்வர குருக்கள் தலைமையில் பூஜைகளை செய்தனர். விழாவின் பத்தாம் நாளான இன்று இரவு தெப்பம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெறுகிறது.