உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகம்; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.. அரோகரா கோஷத்துடன் பரவசம்

வைகாசி விசாகம்; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.. அரோகரா கோஷத்துடன் பரவசம்

மதுரை; முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் முதன்மையான வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாக விழா கடந்த 21-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வும், அங்கு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று வைகாசி விசாகத்தையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் துவங்கினர். முன்னதாக, உற்சவர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று கோயில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில், சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து நேர்த்திகடன் செலுத்தும் பொருட்டு பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து வந்தும் அழகு குத்தியும் தங்களது நேற்றிக் கடனை செலுத்தி வருகின்றனர். விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.  500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !