திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றானது வைகாசி விசாகம் ஆகும். வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தில் முருகன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதனால் இந்த வைகாசி விசாக நாளில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மேலும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சாலையில் தற்காலிக வாகன நிற்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு 28 தேதி முதல் 31 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு ரூபாய் 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்து வருகின்றனர்.