வைகாசி வசந்த விழா; கோவில் திரும்பினார் வரதராஜ பெருமாள்
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் இன்று காலை பெருமாள் கோயிலுக்கு திரும்பினார்
கோயிலில் வசந்த விழா துவங்கி பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் குதிரை, சேஷ, கருட, அனுமார் வாகனங்களில் சேவை சாதித்தார். இதன்படி வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட துடுகுச்சி, மகாலட்சுமி, மாணிக்கா மண்டகப்படிகளில் அருள் பாலித்தார். மேலும் தினமும் இரவு அவதார சேவை நடந்தது. நேற்று காலை அரவிந்த் மண்டகப்படியில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் மாலை 6:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு பூ பல்லக்கில் பெருமாள் வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டு நகர்வலம் வந்தார். இன்று காலை 9:00 மணிக்கு திருக்கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா நிர்வாகிகள் செய்தனர்.