கோவிலுக்கு நிகரான திருத்தேர் தரிசனம்
தேர்த்திருவிழாவில், ஸ்ரீசந்திரசேகரர் –மனோன்மணி அம்மன் தினமும், பல்லாக்கில் திருவீதியுலா சென்று வருகின்றனர். சோமாஸ்கந்தர் தினமும், வாகன காட்சியில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதல்நாள் கற்பக விருட்சம் – சூரியபிரபை வாகனம் – ராவனேஸ்வர வாகனம் – அதிகாரநந்தி வாகனம் – பஞ்சமூர்த்திகள் வாகன காட்சி – யானை வாகன காட்சி, பரிவேட்டை நாளில் குதிரை வாகனம் – தெப்போற்சவ நாளில் பூதவாகன காட்சியில் சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கின்றனர்.
தேர்த்திருவிழாவின்,10 ம் நாள் திருவிழாவாக, ஸ்ரீநடராஜர் தரிசன காட்சி நடைபெறும். அன்றைய தினமும், சிவபெருமான், பிச்சாண்டவர் கோலத்தில் திருவீதியுலா சென்று அரிசி யாசகம் பெறுவார்; அதனை தொடர்ந்து, ஸ்ரீநடராஜப்பெருமாளும் சிவகாமியம்மனும், தனி சப்பரங்களில் எருந்தருளி, திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு மஹா தரிசன காட்சி அருளுகின்றனர். அன்றயை தினம் இரவு, கொடி இறக்கப்படும்.
விழாவின், 11வது நாளில், காலையில் பல்லக்கு ஊர்வலமும், அதனை தொடர்ந்து, மஞ்சள் நீர் விழாவும் நடைபெறும். யாகசாலையில் பூஜித்த கலசங்களில் உள்ள புனித தீர்த்தத்தில், உற்சவர் மற்றும் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும். மறுநாள், உற்சவமூர்த்திகளுக்கு விடையளிக்கும் வைபமும், தேர்த்திருவிழாவை சிறப்புற நடத்த அருள்புரிந்த காலபைரவருக்கு நன்றி கூறும் விழாவும், விடையாற்றி உற்சவம் என்ற பெயரில் நடைபெறுகிறது.
நன்மைகள் பெருகும்...
சுந்தர மூர்த்தி சிவம், பெங்களூரு ஸ்ரீஸ்ரீ குருகுல வேதாகம பாடசாலை முதல்வர்: திருத்தேர் என்பது, கோவிலுக்கு இணையானது; கோவிலில் உறைந்துள்ள இறைவன், சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்து, சோமஸ்கந்தர் ரூபமாக, மக்களை தேடிச்சென்று அருள் பாலிப்பதே தேர்த்திருவிழா. திருத்தேர்கள் அமைந்துள்ள அனைத்து கோவில்களிலும்தை ஆண்டுதோறும் தேர்த்திருவிழா உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
தேர்த்திருவிழா நடத்துவதால், காலத்துக்கும் நன்மை பெருகும்; தேர்த்திருவிழாவின் போது, தேரின் மீது வீற்றிருந்து அருள் பாலிக்கும் இறைவனை தொழுவது, பல கோடி நன்மைகளை வாரிக்கொடுக்கும். மனதில் அமைதி பிறந்து, வீடும், நாடும் மக்களும் ஆனந்தமாக வாழ்வார்கள். ஒவ்வொரு மனிதரும், தங்களது வாழ்வில் பிறவி பயனை அடைய, சொந்த ஊரில் நடக்கும் கோவில் உற்சவத்தை கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.
தரிசனம் செய்வது சிறப்பு
ஸ்ரீநடராஜ சுவாமி, கூனம்பட்டி திருமடம்: ‘கோவில் விளங்க குடி விளங்க’ என்று கூறுவது போல், கோவில்வழிபாடு, திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடினால், தெய்வத்தின் அனுக்கிரகம் முழுமையாக கிடைக்கும். பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.
வயோதிகர், மாற்றுத்திறனாளிகள் வர முடியாது என்பதால், இறைவனே தேரில் திருவீதியுலா சென்று, அவர்களுக்கு அருள்பாலிக்கிறார்.தேர்த்திருவிழா நடத்துவது மிகவும் கடினமானது; இறைவன் அருள் இருந்தால் மட்டுமே, தேர்த்திருவிழா நடத்த முடியும். இறைவனுக்கு நிகர் இறைவன்தான். அந்த இறைவனை திருத்தேரில் வீற்றிருக்கும் நிலையில் தரிசனம் செய்வது சிறப்பு.