சித்தி விநாயகர், ஜெய வீர ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா
மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றங்கரையை ஒட்டி உள்ள சித்தி விநாயகர் மற்றும் ஜெய வீர ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேகத்திற்காக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றதை அடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தினம்தோறும் ஏராளமான பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நேற்று காலை யாக சாலையில் பூர்ணாகுதி முடிவடைந்த உடன் அர்ச்சகர்கள் புனித நீர் அடங்கிய கடங்களை மேள தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்திற்கு கொண்டு சென்று கலசங்களின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள்,தீபாராதனைகள் மற்றும் அன்னதானமும் நடந்தது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.