1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த ஹனுமன்; ஆஞ்சநேயரை தொட்டு வணங்க அனுமதிக்கும் கோவில்!
பெங்களூரு; ரூரல் தொட்டபல்லாபூர் டவுனில் ஸ்ரீ நெலத ஆஞ்சநேயா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் நெலத என்றால் பூமி அல்லது தரை என்று பொருள்படும். 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த ஹனுமன் விக்கிரகத்தை தோண்டி எடுத்து, அதை இங்கு நிறுவி கோவில் கட்டியதால், இக்கோவிலுக்கு நெலத ஆஞ்சநேயா என்று பெயர் வந்துள்ளது.
பெரும்பாலான கோவில்களில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் இந்த கோவிலின் மிக முக்கியமான அம்சமே கருவறைக்குள் சென்று ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்க பக்தர்களுக்கு அனுமதி உண்டு. ஜாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் செல்லலாம். ஹனுமனை மனமுருகி வேண்டினால் மன உளைச்சல், பயம், சனிக்கிரக தோஷங்கள், வாழ்வில் ஏற்படும் பல தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஹனுமனை தவிர விநாயகர், சீதா, லட்சுமணன் சமேத ராமர் உள்ளிட்ட சுவாமிகளின் விக்கிரகங்களும் உள்ளன. ஏராளமான நாக தேவதை சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ராகு, கேது தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் இங்கு வருகின்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். சனிக்கிழமைகள், ஹனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி ஆகிய சிறப்பு நாட்களில், மதிய நேரத்திலும் நடை சாத்தப்படாமல் இரவு வரை திறந்து இருக்கும். சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், காலையிலேயே சென்று வருவது நல்லது.
எப்படி செல்வது?: மெஜஸ்டிக்கில் இருந்து தொட்டபல்லாபூர் 45 கி.மீ., துாரம்.
மெஜஸ்டிக்கில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை தொட்டபல்லாபூருக்கு பி.எம்.டி.சி., பஸ் செல்கிறது. பஸ் நம்பர் 285 எம்.
ரயிலில் சென்றால் தொட்டபல்லாபூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். – நமது நிருபர் –